Wednesday, September 23, 2009

அதிகாரிகளை நம்பி மோசம் போன ஜெயலலிதா !



1991ல் ராஜீவ் மரணத்திற்குப் பின் ஏற்பட்ட அனுதாப அலையால், ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, மக்கள் தனக்கு திடீரென தந்த பதவியை சரிவர பயன்படுத்தத் தவறினார். தமிழகம் வரலாறு காணாத ஊழலையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் சந்தித்தது. எதிர்த்துக் குரல் கொடுத்த அனைவரும், அப்போது அமலில் இருந்த “தடா“ என்ற “ஆள் தூக்கிச் சட்டத்தால் சிறையில் அடைக்கப் பட்டனர்.

ஜெயலலிதா, அம்மன் மற்றும் புனித மேரியாக சித்தரிக்கப் பட்டார். நிரந்தர முதல்வர் என்ற அடைமொழி வழங்கப் பட்டது. சட்டசபையில் எதிர்க்கட்சியினர், குண்டுக் கட்டாக வெளியேற்றப் பட்டனர். எதிர்ப்புக் குரல் அனைத்தும் ரவுடிகள் மற்றும் காவல்துறையினரால் அடக்கப் பட்டது. ஐஏஎஸ் அதிகாரிகள் திராவகம் வீசித் தாக்கப் பட்டனர். தேர்தல் ஆணையர், விமானநிலையத்தை விட்டு வெளியே வரமுடியாமல் சிறை வைக்கப் பட்டார். இது எல்லாவற்றிற்கும் மேலாக வளர்ப்பு மகன் திருமணம் உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு நடத்தப் பட்டது. காவல் அதிகாரிகளும், ஐஏஎஸ் அதிகாரிகளும், அதிமுக மாவட்டச் செயலாளர்களைவிட விசுவாசமாக நடந்து கொண்டனர்.



இத்தனை காரணங்களால், கடும் எரிச்சலுக்குள்ளான மக்கள், 1996ல் கருணாநிதியை தேர்ந்தெடுத்தனர். கருணாநிதியும், ஓரளவுக்கு நன்றாகவே ஆட்சி செய்தார். இப்போது இருப்பது போல், ஊழல் குற்றச் சாட்டுகள் பெரிதாக இல்லாத அளவுக்கே அந்த ஆட்சி இருந்தது. ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள், மற்றும் அதிகாரிகள் மேல், பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன.

நன்றாக ஆட்சி செய்தாலும், 2001ல் அடுத்து வந்த சட்டசபைத் தேர்தலில், திமுக தோற்று, ஜெயலலிதா மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். ஜெயலலிதா செய்த அத்தனை தவறுகளையும் மக்கள் மன்னித்து, மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரச் செய்தார்கள். ஆனால், நடந்த தவறுகளில் இருந்து பாடம் கற்காமல், ஜெயலலிதா 1991ல் இருந்ததைவிட மோசமான ஆட்சியை நடத்தத் தொடங்கினார். 1991ல் “தடா“ என்ற ஆள்தூக்கிச் சட்டம் இருந்தால், 2001ல் ஜெயலலிதாவுக்கு வசதியாக, “போடா“ என்ற கொடுங்கோல் சட்டம் அமலில் இருந்தது. இச்சட்டத்தின் கீழ், ஜெயலலிதா, பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், என பலரையும் சிறையில் அடைத்தார். மதமாற்ற தடை சட்டம், ஆடு கோழி வெட்ட தடை, ராணி மேரி கல்லூரி இடிக்க முயற்சி என்று பல மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

ஆட்சிக்கு வந்த முதல் மாதத்திலேயே, பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப் பட்டனர். கஜானா காலி கருணாநிதி கடன் வைத்து விட்டார் என்று அறிக்கை விட்டார். கருணாநிதி, நான் அரிசியாக கிடங்கில் வைத்து விட்டேன் என்று பதில் அறிக்கை விட்டார். அந்த அரிசி புழுத்த அரிசி, என்று பதில் குற்றச் சாட்டு கூறி விசாரணைக்கு உத்தரவிட்டார்.



இது எல்லாவற்றையும் விட, பின்விளைவுகளை அறியாமல் ஜெயலலிதா எடுத்த மிக மிக முட்டாள்த்தனமான நடவடிக்கை அரசு ஊழியர்களை பகைத்துக் கொண்டதுதான். அரசு ஊழியர்கள் என்பவர்கள், இந்நாட்டின் மிக மிக சுயநலமான கூட்டத்தில் ஒரு பகுதியினர். நாட்டில், என்ன அநியாயம் நடந்தாலும், “நான், எனது குடும்பம்“ என்று மட்டுமே சிந்திக்கும் ஒரு கூட்டம் உண்டென்றால், அது அரசு ஊழியர்கள் தான். சராசரியாக ஓரளவு நியாயமான ஊதியம் பெற்று வந்தாலும்,

இது போதாது, வங்கி ஊழியர்களுக்கு ஊதியம் அதிகம், எப்படி கூடுதல் வருமானம் பெறுவது என்று மட்டுமே சிந்திக்கும் கூட்டத்தினர் அவர்கள். இந்த அரசு ஊழியர்களை கடுமையாக பகைத்துக் கொண்டார் ஜெயலலிதா.


ஆட்சிக்கு வந்த 6 மாதங்களிலேயே, “அரசு ஊழியர்கள் வெறும் 2 சதவிகிதம் தான், அவர்கள், அரசு வருவாயில், 94 சதவிகிதத்தை ஊதியமாக பெறுகிறார்கள்“ என்று அறிக்கை வெளியிட்டு, அரசு ஊழியர்களின், சரண் விடுப்பு, ஓய்வூதியப் பயன்கள், பயணப்படி, விடுப்புக் கால பயணப்படி, இன்னும் பல சலுகைகளை ரத்து செய்தும் குறைத்தும் ஆணையிட்டார் ஜெயலலிதா.


இதை எதிர்த்து, அரசு ஊழியர்கள் ஜுலை 2002 ஆண்டில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இவ்வேலை நிறுத்தத்தை, பேச்சு வார்த்தை மூலம் தவிர்க்க எந்த முயற்சியையும் ஜெயலலிதா எடுக்கவில்லை. அப்போது, தலைமைச் செயலாளராக இருந்த, சங்கர், நிதிச் செயலாளர் நாராயணன், மாநகர ஆணையாளர் விஜயக்குமார், உளவுப் பிரிவு தலைவர் நடராஜன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டாம் என ஆலோசனை கூறினர். இவர்கள் பேச்சைக் கேட்ட ஜெயலலிதா, வேலை நிறுத்தம் சட்ட விரோதம் என அறிவித்தார். அதை மீறி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்களை, நள்ளிரவில், காவல்துறையினரை விட்டு கைது செய்தார். நாகரிகமாக நடுத்தர வர்க்க வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த அரசு ஊழியர்கள் இந்த நள்ளிரவு கைது கண்டு, நடுங்கிப் போயினர்.



இதையும் தாண்டி, காவல்துறை அதிகாரிகள், அரசு ஊழியர் குடியிருப்பில் இருந்த அரசு ஊழியர்களை இரவோடிரவாக காலி செய்ய சொல்லி மிரட்டினர். பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இதற்கும் மேலாக, ஏறக்குறைய 1.7 லட்சம் அரசு ஊழியர்கள் ஒரே நாளில் டிஸ்மிஸ் செய்யப் பட்டனர். கடும் அதிர்ச்சிக்கு ஆளான ஊழியர்கள், நீதிமன்றத்தை அணுகினர். நீதிமன்றம், வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றால், அனைவரின் டிஸ்மிஸ் உத்தரவையும் ரத்து செய்வதாக தெரிவித்ததையடுத்து, வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, அரசு இரவோடு இரவாக தலைமை நீதிபதி வீட்டில், மேல்முறையீடு செய்து, அவ்வுத்தரவுக்கு தடை பெற்றது. அரசு ஊழியர்கள் 1.7 லட்சம் பேர் டிஸ்மிஸ் செய்யப் பட்டது செல்லும் என்று தீர்ப்பளிக்கப் பட்டது.

இதற்கிடையில், தற்காலிகமாக அரசு ஊழியர்கள் நியமிக்கப் பட்டனர். இவர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப் பட்டது. இதற்குப் பிறகு, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில், மூன்று குழுக்களை அமைத்து, அரசு ஊழியர்களின் மீதான குற்றங்கள் நிரூபிக்கப் பட்டன.
சிறந்த அரசியல்வாதியான கருணாநிதி, அரசு ஊழியர் போராட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்ததுடன், “கழக அரசு வந்ததும், அனைவருக்கும் உடனடியாக வேலை“ என்று அறிவித்தார். அடுத்து 2004ல் வந்த நாடாளுமன்ற தேர்தலில், தமிழகம் மற்றும் புதுவையின் 40 தொகுதிகளையும் தி.மு.க கூட்டணி கைப்பற்றியது.


அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா, தனது மக்கள் விரோத உத்தரவுகள் அனைத்தையும், வாபஸ் பெற்றார். அரசு ஊழியர்களை பகைத்துக் கொண்டது மிகப்பெரிய தவறு என்று உணர்ந்தவர், அரசு ஊழியர்களுக்கு பறிக்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும் மீண்டும் அளித்தார். ஆனாலும், கடும் நெருக்கடிக்கு ஆளான அரசு ஊழியர்கள் ஜெயலலிதாவை மன்னிக்கத் தயாராக இல்லை. 2006ல் மீண்டும் ஜெயலலிதா தோல்வியையே சந்தித்தார்.



2006ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, சொன்னது போலவே, வேலை இழந்த அனைவருக்கும் மீண்டும் வேலை அளித்தார். அனைத்து தண்டனைகளையும் ரத்து செய்தார்.

அரசு ஊழியர்களின் ஒத்துழைப்பு முக்கியம் என்று உணர்ந்த கருணாநிதி, மீண்டும் மீண்டும் சலுகைகளை அள்ளி வழங்கினார். மத்திய அரசு பஞ்சப்படி வழங்கிய உடனே தாமதமில்லாமல் பஞ்சப்படி வழங்கப் பட்டது. ஊதியக்குழு நிலுவைகள் அனைத்தும் உடனடியாக வழங்கப் பட்டன. ஒரு ஆண்டுக்குள் மூன்று பஞ்சப்படிகள் வழங்கப் பட்டன. இதற்கான விசுவாசத்தை, அரசு ஊழியர்கள் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வுக்கு வெற்றி வாய்ப்பை வழங்கியதன் மூலம் நிரூபித்தனர். திமுக அரசு ஈடுபடும் அனைத்து முறைகேடுகளிலும் பங்கெடுப்பதன் மூலமும், தேர்தலில் தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் செய்தனர்.



அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலாலும், தனது ஆணவத்தாலும், அரசு ஊழியர்களை பகைத்துக் கொண்ட ஜெயலலிதா, இன்று வரை அதற்கான பயனை அனுபவித்து வருகிறார்.

/ஒப்பாரி/


3 comments:

  1. //அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலாலும், தனது ஆணவத்தாலும், அரசு ஊழியர்களை பகைத்துக் கொண்ட ஜெயலலிதா, இன்று வரை அதற்கான பயனை அனுபவித்து வருகிறார்.//

    இவர் திருந்துவார் என்று மட்டும் எதிர்பார்க்காதீர்கள் யாரும். அதற்கு வாய்ப்போ இல்லை

    ReplyDelete
  2. http://www.youtube.com/watch?v=ssTdyW6YuDk&NR=1

    ReplyDelete
  3. your views are one side. Do you think Karunanidhi is good ruler? Then you are illitrate.
    Sangamithra

    ReplyDelete